ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..!
ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் செல்போன் உரையாடல்கள் குறித்து எச்சரிக்கை செய்தியானது காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், பவன் கேரா, ஆம் ஆத்மி எம்பி ராகுல் சத்தா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பபட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் ஐ-போன்களை ஒட்டுக் கேட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், இந்த விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரத்தைக் கேட்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்த விவகாரத்தில், அனைத்து குடிமக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்கு ஆப்பிள் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உரையாடல்கள் குறித்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அலர்ட் செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரத்தைக் கேட்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.