பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுங்கள் – நிதி ஆயோக் உறுப்பினர் எச்சரிக்கை!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுமாறு நிதி ஆயோக் உறுப்பினர் வலியுறுத்தல்.
டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முழுமையாக ஒழியவில்லை. தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றுமாறு தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால், நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த கொரோனா சூழலில் பண்டிகைகளை வீட்டில் இருந்தே கொண்டாட வேண்டும். இதனை அறிவுரை அல்லது எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம். கொரோனா வைரசுக்கு கொண்டாடட்டங்கள் மற்றும் கூட்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றார்.
இதனால் அடுத்தடுத்த நாட்களில் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்தார். வைரசுக்கு வாய்ப்பு கொடுத்துவிட கூடாது. தீபாவளி வரை பண்டிகைகளை வழிகாட்டு நெறிமுறைகளுடன் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நாட்டில் 35 மாவட்டங்களில் கொரோனா பரவும் விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் தங்கள் வீட்டிலேயே கொண்டாடுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது என்றும் கூறினார்.