சுஷாந்த் சிங் மரண வழக்கு.. பீகார் போலீசாரிடமிருந்து ஆவணங்கள் பெற்ற சிபிஐ.!
கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங் தந்தை புகார் கொடுத்தார்.
இதனால், பீகார் போலீசார் தனிப்படை அமைத்து மும்பையில் விசாரணை நடத்தியது. ஆனால், தங்களுக்கு மும்பை காவல்துறையினர் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பீகார் போலீசார் குற்றம்சாட்டினர். இதையடுத்து, சுஷாந்த் சிங் தந்தை மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் மனு கொடுத்தார்.
இதையடுத்து, சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு சுஷாந்த் சிங் வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சுஷாந்த் சிங்ராஜ் மரண வழக்கு தொடர்பாக ரியா சக்ரவர்த்தி, இந்திரஜித் சக்ரவர்த்தி, சந்தியா சக்ரவர்த்தி, ஷோயிக் சக்ரவர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி மற்றும் பலர் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், சுஷாந்த் சிங்ராஜ் மரண வழக்கு தொடர்பான ஆவணங்கள் பீகார் போலீசாரிடமிருந்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வாங்கியது.
இந்த வழக்கானது பணமோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய விஜயமல்லையா மற்றும் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு(Special CBI) வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.