ஏர் ஏசியா மீது சிபிஐ வழக்குப்பதிவு..!
சர்வதேச விதிமுறைகளை மீறி விமானங்களை இயக்க உரிமம் பெற்றதாக, ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சர்வதேச அளவில் விமானங்களை இயக்குவதற்கு ஒரு விமான நிறுவனம் குறைந்தபட்சம் 20 விமானங்களை வைத்திருப்பதுடன், 5 ஆண்டுகள் அனுபவங்களை கொண்டிருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இந்த விதிமுறைகளை மீறி ஏர் ஏசியா நிறுவனம், அரசு ஊழியர்கள் உதவியுடன் சர்வதேச அளவில் விமானங்களை இயக்குவதற்கு உரிமங்களைப் பெற்றதாக புகார் கூறப்படுகிறது.
அதே போன்று வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளையும் மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாக தலைமை செயலதிகாரி டோனி பெர்னாண்டஸ், ஏர் ஏசியா இயக்குனர் வெங்கட்ராமன், டிராவல் ஃபுட் நிறுவன தலைவர் சுனில் கபூர் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 6 இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது.