அரசு ஆசிரியர் பணி ஊழல் விவகாரம்.! சிபிஐ சோதனையில் சிக்கிய 4வது ஆளும்கட்சி எம்எல்ஏ.!
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் மேற்கு வங்க ஆளும் கட்சி எம்எல்ஏ வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. முதலில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வந்த விசாரணையினை தற்போது மத்திய புலனாய்வு துறையான சிபிஐ விசாரித்து வருகிறது. இதுவரையில் ஆளும் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக பணிநியமன முறைகேடு வழக்கில் அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி மற்றும் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுஅவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்களை தொடர்ந்து, இந்த பணி நியமன ஊழல் வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தெஹட்டா தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபாஸ் சாஹாவை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எம்எல்ஏவின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனை செய்தனர்.