முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவை கைது செய்தது சிபிஐ!

kavitha

Kavitha: திகார் சிறையில் உள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்தது சிபிஐ.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைதை தொடர்ந்து கே.கவிதாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

இதன்பின் அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள கவிதாவை சிபிஐ-யும் கைது செய்துள்ளது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிதாவிடம் கடந்த வாரம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் தற்போது கவிதா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அதேசமயம், கவிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்