டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது..!
தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. . ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை காவிரியில் உடனடியாக திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறைப்படி வழங்காத நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து, தமிழக முதல்வரின் கடிதத்தையும் அளித்து இருந்தார். இதற்கிடையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தர மறுத்தால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.