Cauvery Issue : பரபரக்கும் காவிரி விவகாரம்.! திங்கள் கிழமை கூடும் காவிரி மேலாண்மை வாரியம்.!
கர்நாடகா அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தர வேண்டிய குறிப்பிட்ட அளவு தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று வாரியமானது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட பரிந்துரை செய்தது.
மேலும், இதுகுறித்து கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக எங்களால் காவிரி ஒழுங்காற்று மைய உத்தரவுபடி தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறந்து விட முடியாது என கூறினார் மேலும் இதுகுறித்து நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக அரசின் கோரிக்கைகளை முன்வைத்தார்.
இந்நிலையில் தான் வரும் திங்கள் (செப்டம்பர் 18) அன்று காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காவேரி ஒழுங்காற்று மையம் கர்நாடக அரசுக்கு பரிந்துரை வழங்கிய பின்னர் இந்த கூட்டம் நடைபெற உள்ளதால் , காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.