காவிரி விவகாரம்.. கர்நாடகாவில் முழு அடைப்பு.! இந்த மாவட்டத்தில் மட்டும் ‘பந்த்’ இல்லை..!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு, காவிரி ஒழுங்காற்று மையம் பரிந்துரை செய்தபடி, உரிய அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் ஆளும் கட்சியை தவிர பல்வேறு அரசியல் கட்சிகள், கன்னட அமைப்புகள் முழு அடைப்பு (பந்த்) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது இருந்தனர்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 29) முழு அடைப்பு போராட்டத்திற்கு 1600க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்து அழைப்பு விடுத்தது இருந்தன.
அதன்படி, இன்று காலை முழுதலே பெங்களூரு, சிக்மகளூர் என கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என பெங்களூருவில் நேற்று நள்ளிரவு முதலே 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களை கொண்ட தக்ஷணா கன்னடா மாவட்டத்தில் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அன்று இன்று காலை முதலே வழக்கம் போல வாகனங்கள் இயங்கி வருகின்றன. மேலும், கடைகளும் பெரும்பாலான இடங்களில் திறந்தே இருந்தது. இதனால் பொதுமக்கள் வழக்கம் போல தங்கள் தினசரி பணிகளை செய்து வருகின்றனர்.
கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் பந்த் நடைபெற்று வருவதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல தமிழகத்தில் இருந்து இன்று கர்நாடகாவுக்கு எந்த பேருந்து, வாகன சேவையும் இயக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன.