ஆந்திராவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு..! இன்று முதல் தொடக்கம்.!
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல்கள் அதிகமாக ஒலிக்க ஆரம்பித்து விட்டன. ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவை அந்நாட்டு மாநில சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டும் விட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல்… வாக்காளர்களுக்கு துரோகம்.! காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.!
அதேபோல, மற்ற மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அந்தந்த மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது, இது குறித்து அம்மாநில செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கூறுகையில், சுதந்திரம் பெற்ற பிறகு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இல்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே நடத்தப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் பெறாத சமூகத்தினருக்கு நலத்திட்டங்களை பெற வழிவகை செய்ய முடியும். இதனால் அவர்கள் வாழ்க்கை தரம் உயரும் என கூறினார்.
மேலும், முதலில் 139 பிற்படுத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புகளை மட்டும் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும். தற்போது எல்லா சாதிகளையும் உள்ளடக்கி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும், இதில் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு தன்னார்வலருக்கு தலா ஐம்பது வீடுகள் ஒதுக்கப்படும். அவர்கள் வீடு வீடாக சென்று சாதிவாரி மக்கள் தொகை விவரங்களை சேகரிப்பார்கள். அதனை அந்தந்த கிராம, நகர செயலகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்தப் பணி ஒரே கட்டமாக நடைபெற்று முடிக்கப்படும். 10 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் 5 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும். பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு முன்னதாக இந்த அனைத்து பணிகளும் நிறைவடையும். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் முழுதான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் என ஆந்திர மாநில செய்தி தொடர்புத்துறை அமைச்சர் சீனிவாச வேணுகோபால் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறினார்.