வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கு: வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும்- உச்சநீதிமன்றம்!
வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 43 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு, விவசாயிகளுடன் 7 முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அது எதுவும் பலனளிக்கவில்லை. வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்புகள் கூறும் நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்ட பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மேலும் விவசாயிகளின் போராட்டங்களை எதிர்த்து மூன்று பேர் மனுதாக்கல் செய்த நிலையில், நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், மத்திய அரசு நடத்தும் 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் சமூக முடிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்குகளை வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.