லட்டு சர்ச்சை : திண்டுக்கல் நிறுவனம் மீது 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
ஏழுமலையான் கோவிலுக்கு நெய் விநியோகம் செய்த தனியார் நிறுவனமான ஏ.ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவன நிர்வாகிகள் மீது விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
திண்டுக்கல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பதி கோயிலுக்கு விநியோகம் செய்த நெய்யில் கலப்படம் செய்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரில் திருப்பதியில் உள்ள கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, தற்போது ஏழுமலையான் கோவிலுக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கலில் உள்ள ஏ.ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பகதர்கள் கூட்டம் அலைமோதும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாத லட்டுவில் ஜெகன் மோகன் ஆட்சியில் மிருகங்களின் கொழுப்பு சேர்க்கப்படுவதாக தற்போதைய முதல்வரான சந்திரபாபு நாய்டு கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. தற்போது, அடுத்தகட்டமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு விநியோகித்த நெய்யில் கலப்படம் செய்ததாக கூறி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளரான முரளி கிருஷ்ணா புகார் அளித்தார்.
அந்த புகாரில், ‘ஏ.ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி, விலங்குகளின் கொழுப்புகள் கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்துள்ளனர் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், பத்து லட்சம் கிலோ தரமான நெய்யை சப்ளை செய்ய கடந்த மே மாதம் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனால், கடந்த ஜூன் மாதம் அந்த நிறுவனம் 4 டேங்கர் லாரிகளில் நெய்யினை விநியோகம் செய்தனர். ஆனால், அதனை பரிசோதிக்காத ஜெகன் மோகன் அரசு அப்படியே உபயோகித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் வந்த நெய்யை பரிசோதனை செய்ததில் அதில் கலப்படம் இருப்பது உறுதியானது.
ஆனால், அதற்கு அந்நிறுவனம் ‘எங்கள் நிறுவனம் எந்த வித கலப்படமும் செய்யவில்லை’ என மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால் நெய்யில் கலப்படம் இருப்பது தற்போது நிரூபணம் ஆனதால் தேவஸ்தான நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காக ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலாளர் முரளி கிருஷ்ணா அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் தனியார் நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில், உணவு கலப்படம், மோசடி, மத உணர்வுகளைப் புண்படுத்துதல், குற்றத்தை மறைத்தல் என 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த புகாரின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.