#CarAccident: ரிஷப் பந்த்-க்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் – பிசிசிஐ
கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த்-க்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிசிசிஐ அறிவிப்பு.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயம் அடைந்த ரிஷப் பந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரூர்க்கி நோக்கி காரை ஓட்டி செல்லும்போது ரிஷப் பந்த் கண் அசைந்ததால் விபத்து நடந்துள்ளது என்றும் தீப்பற்றி எரிந்த வாகனத்தில் இருந்து தப்பிக்க காரின் ஜன்னலை உடைத்ததாகவும் உத்தரகாண்ட் காவல்துறை டிஜிபி அசோக் குமார் கூறினார்.
ரூர்க்கி சிவில் மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு டேராடூன் மேக்ஸ் மருத்துவமனைக்கு ரிஷப் பந்த் மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், கார் விபத்தில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்-க்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கார் விபத்தில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ உதவி உள்பட அனைத்து உதவிகளும் செய்து தர பிசிசிஐ தயாராக உள்ளது. ரிஷப் பந்த்-க்கு நெற்றியில் 2 வெட்டுகள், வலது முழங்காலில் தசை நார் கிழிந்துள்ளது. மேலும், வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரல் காயமடைந்த நிலையில், முதுகிலும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.