மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் முதலாளித்துவம் உள்ளது:மாயாவதி..!
மத்திய அரசில் இணை செயலாளர் பதவிக்கு நேரடியாக வெளியில் இருந்து பணியாளரை தேர்வு செய்ய சமீபத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அரசுத் துறைகளில் திறமைவாய்ந்தவர்களை அதிகரிக்கும் பொருட்டு லேட்ரல் என்ட்ரி முறையை நிதி ஆயோக் குழு பரிந்துரை செய்தது. அதன்படி வருவாய், நிதி சேவை, பொருளாதார விவகாரங்கள், வேளாண் ஒத்துழைப்பு-விவசாயிகள் நலன், சாலைப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விமானப் போக்குவரத்து மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் இணை செயலாளர் பதவிக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, மத்திய அரசின் இணை செயலர் பதவிக்கு நேரடியாக வெளியில் இருந்த ஆள் எடுக்கும் முடிவு மத்திய பாஜக அரசின் தோல்வியை காட்டுகிறது.
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று வருபவர்களை விடுத்து தனியார் துறைகளில் இருந்து நிபுணர்களை நியமிப்பதன் நோக்கம் என்ன ? இவ்வாறான நிபுணர்களைக் கூட உருவாக்க முடியாத நிலையில் தான் இந்த அரசு உள்ளதா ?
இது ஒரு அபாயகரமான முடிவுவாகும். இதனால், மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் முதலாளித்துவம் மற்றும் வசதிபடைத்தவர்களின் செல்வாக்கு அதிகரித்துவிடும்.