கடன் தவணை செலுத்த சலுகை வழங்க முடியாது -உச்சநீதிமன்றம் ..!
- கொரோனா 2-வது அலையை காரணம் காட்டி வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர் வங்கியில் வாங்கிய கடன் தவணையை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதேபோல தற்போது கொரோனாவின் 2-வது அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக பலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதனால் வங்கிக் கடன் தவணையை திருப்பி செலுத்துவதற்கு அவகாசத்தை வழங்கவேண்டும் என தெரிவித்தார். இந்த மனு நீதிபதி அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொரோனா இரண்டாவது அலையை காரணம் காட்டி வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆறு மாதங்கள் வரை கடன் தவணை ஒத்திவைப்பு சலுகையை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.