கல்வி நிறுவனங்களில் மத ரீதியிலான உடையை அணியலாமா…? – உச்சநீதிமன்றம்
சீருடை பரிந்துரைக்கப்பட்ட பள்ளிக்கு அந்த ஹிஜாபை அணிந்து செல்ல முடியுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி.
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் கர்நாடக அரசு விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த குப்தா மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் நீங்கள் விரும்பும் இடத்தில் தாவணி அல்லது ஹிஜாப் அணிய உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நாங்கள் ஒரு கணம் ஒப்புக்கொள்வோம், ஆனால் சீருடை பரிந்துரைக்கப்பட்ட பள்ளிக்கு அந்த ஹிஜாபை அணிந்து செல்ல முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாநில அரசு கல்வி உரிமை பறிக்கவில்லை. பரிந்துரைக்கப்பட்டுள்ள சீருடையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று தான் அரசு கூறுகிறது. மேலும் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத நடைமுறையாக இருக்கலாம். அதற்காக அரசு கல்வி நிறுவனங்களில் நீங்கள் மதரீதியான உடை அணியலாமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பின் படி, நமது நாடு மதச்சார்பற்ற நாடு. எனவே நீங்கள் மதரீதியான உடையை அரசு நடத்தும் கல்வி நிறுவனத்தின் அணிய வேண்டும் என்று கூறுகிறீர்கள் இது விவாதத்திற்கு உரியது என கோரி நீதிபதிகள் விசாரணை ஒத்திவைத்துள்ளனர்.