சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது …!விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனு …!தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்
சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.
பல போராட்டங்களுக்கு மத்தியில் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் விளக்கம் ஒன்றை அளித்தார்.அவர் கூறுகையில், எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செல்லவில்லை.சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட தயாரா? என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கேள்வி எழுப்பினார்.சபரிமலை கோயில் விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கு கேரள அரசும் தேவசம் போர்டு எடுக்கும் முடிவுக்கு எந்த முடிவும் எடுக்கலாம் என்று தெரிவித்தது.
இன்று திருவனந்தபுரத்தில் சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில் ,சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது.சபரிமலை கோவிலில் நடைபெற்ற சம்பவங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சபரிமலையில் 2 நாள் நடந்த நிகழ்வுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும். நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் .
தேவசம் போர்டு எடுத்திருக்கும் முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.வழக்கறிஞர்கள் உடன் ஆலோசித்த பின்னர் எப்போது மனுதாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்படும்.அதேபோல் சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது என்றும் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.