நொய்டாவில் கஃபே – சவால்களை சந்தித்த திருநங்கை பெண்மணி சாதனை!
பல ஹோட்டல்களில் பாதிக்கப்பட்டதால், தனது சமூகத்தினருக்கு ஊக்கமளிக்கும் எனும் நம்பிக்கையில், நொய்டாவில் கஃபே திறந்துள்ளார் திருநங்கை பெண்மணி.
தற்போதைய காலகட்டங்களில் முன்பு போல பெண்களும் சரி, திருநங்கைகளும் சரி வீட்டுக்குள் முடங்கி கிடப்பது கிடையாது. தங்களுக்கான வாழ்க்கையை துணிந்து வாழ துவங்கி விட்டார்கள். பலர் சாதனைகளும் செய்து வருகிறார்கள். ஆண்களுக்கு இணையாக தங்களாலும் சாதிக்க முடியும் எனவும், சில கொடூரமான குணம் கொண்ட ஆண்களின் சீண்டல்களுக்கு ஆளாகியிருந்தாலும் சாதிக்கும் வெறியுடன் பல திருநங்கைகள் வாழ்ந்து வருகிறார்கள். அது போல தற்பொழுது நொய்டாவில் உள்ள திருநங்கை சகோதரி ஒருவர் சாதித்துள்ளார். திருநங்கைகள் வெளியில் வேலைக்கு சென்றாலே சிலரது குணங்களை வைத்து அனைத்து திருநங்கைகளும் தவறானவர்கள் என சித்தரிக்கும் சில ஆண்கள் அவர்களை துன்புறுத்தி வருகிறார்கள்.
அது போல உரூஸ் உசேன் எனும் நொய்டாவை சேர்ந்த திருநங்கை பல ஹோட்டல்களில் வேலை பார்த்து சிலரால் துன்புறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தற்பொழுது அவரது சிறந்த முயற்சியால் அவரே தனக்கென சொந்தமாக ஒரு ஹோட்டலை துவங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பல பணியிடங்களில் தான் துன்புறுத்தலுக்கு ஆளாகியதால், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் எனும் நோக்கிலும், தனது சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் தான் தற்பொழுது ஒரு ஹோட்டலை துவங்கியுள்ளதாக கூறியுள்ளார்.