மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்.!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24முதல் ஏப்ரல் 14வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நாளை மறுநாள், இந்த ஊரடங்கு முடியும் நேரத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, அல்லது தளர்வு ஏற்படுமா என இன்னும் மத்திய , மாநில அரசுகள் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், நிதித்துறை, பொதுத்துறை போன்ற முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த அமைச்சரவை கூட்டம் மூலம் ஆலோசிக்கப்படும் முக்கிய ஆலோசனைகள் பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் எனவும், ஊரடங்கில் கொடுக்கப்பட வேண்டிய முக்கிய தளர்வுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய ஏற்றுமதி, இறக்குமதி போன்ற முக்கிய துறைகளுக்கு தளர்வு அளிக்கப்பட வேண்டும் என பிரதமருக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.