கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துப் பொருட்களுக்கான வரி விதிப்பு குறித்து ஜூன் 8-ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு – மத்திய நிதிஅமைச்சர்!
கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்து பொருட்கள் மீதான வரிவிதிப்பு குறித்து ஜூன் 8-ஆம் தேதி அமைச்சரவை குழு கூடி முடிவு எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பின்பதாக ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 43வது கூட்டம் நேற்று மத்தியம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மலா சீதாராமன் அவர்கள், இறக்குமதி செய்யப்பட்ட கூடிய கொரோனா தடுப்பு மருந்துகள் இலவசமாக இறக்குமதி செய்யப்பட்டால் அவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
மேலும் கருப்பு பூஞ்சைக்கான அம்போட்டெரிசின் -பி மருந்து உள்ளிட்டவை இலவசமாக அளிப்பதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது தனியாருக்கோ இறக்குமதி செய்யப்பட்டால் அதன்மீது ஜிஎஸ்டி முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை ஆகஸ்டு 31 வரை தொடரும் என தெரிவித்துள்ள அவர், கொரோனா தடுப்பு மருந்துகள் தடுப்பூசிகள் ஆகியவற்றின் மீதான வரிவிதிப்பு குறித்த பரிந்துரைகள் ஜூன் 8-ஆம் தேதி அமைச்சரவை குழு கூடி முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக அளிப்பதாகவும், மொத்த உற்பத்தியில் 50% இவ்வாறு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 25% மாநில அரசு மருத்துவமனைகளுக்கும், 25% தனியார் மருத்துவமனைகளுக்கும் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் மாநிலங்களுக்கு அளிக்கப்படக் கூடிய அளவு எந்த சூழலிலும் குறைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.