மக்களவை தேர்தலுக்குள் சிஏஏ சட்டம் நடைமுறை – அமித்ஷா திட்டவட்டம்!
2024 நடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குள் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் டிசம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது.
ஆனால், சிஏஏ சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. இதனால், சட்டம் இயற்றியும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்வினையாற்றினர்.
இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன்பு சிஏஏ சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். தேசிய தலைநகர் டெல்லியில் உலகளாவிய வணிக உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இன்பச்செய்தி! இதற்கான வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!
இதில், குறிப்பாக அவர் பேசியதாவது, வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும். சிஏஏ என்பது குடியுரிமை வழங்குவதற்கான ஒரு செயல், யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல. மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் வாயிலாக குடியுரிமை வழங்கப்படும். சிஏஏ என்பது நாட்டின் ஒரு சட்டம், அது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். இது உறுதி, இதை யாராலும் தடுக்க முடியாது திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும், CAA சட்டம் காங்கிரஸ் அரசின் வாக்குறுதி. நாடு பிரிக்கப்பட்டு அந்த நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டபோது, அகதிகள் இந்தியாவில் வரவேற்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் உறுதியளித்தது. ஆனால், இப்போது அவர்கள் சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்வாங்குகிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.