7 மாநில இடைத்தேர்தல் நிலவரம்.., மலை கிராமத்தில் முதன்முறையாக இயந்திர வாக்குப்பதிவு..!

BY Election

இடைத்தேர்தல்: தமிழகத்தில் விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு பின்னர் இன்று அங்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போல 6 வடகிழக்கு மாநிலங்களில் 12 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில், பெரும்பாலான இடங்களில் கட்சி தாவல், ராஜினாமா உள்ளிட்ட காரணங்களாலும், சில இடங்களில் வேட்பாளர் மரணித்த காரணத்தாலும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், பீகார், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கம் : இம்மாநிலத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தெற்கு, பக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளில் இடைதேர்தல் நடைபெறுகிறது. இதில் கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

உத்தரகாண்ட் : பத்ரிநாத் மற்றும் மங்களூரு ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரு தொகுதிகளும் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது.

பஞ்சாப் :  ஜலந்தர் மேற்கு தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆம் ஆத்மி வெற்றி பெற்று இருந்தது. ஆனால் அந்த வெற்றியாளர் பாஜகவில் இணைந்து தற்போது பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

இமாச்சலப் பிரதேசம் : டேஹ்ராவில் வெற்றி பெற்று இருந்த சுயேட்சை வேட்பாளர் பாஜகவில் இணைந்து போட்டியிடுகிறார். அதே போல ஹமிர்பூர், நலகர் தொகுதியிலும் முன்னதாக சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதனால் அங்கும் பாஜக காங்கிரஸ் நேரடி போட்டி நிலவுகிறது.

பீகார் : ரூபாலி தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் முன்னர் வெற்றி பெற்று இருந்தது. அங்கு ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு நேரடி போட்டி நிலவுகிறது.

மத்தியப் பிரதேசம் : அமர்வாடாவில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் இம்முறை பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் தொகுதியில், நீதி, துரோங்கிரி ஆகிய மலை கிராமத்தில் இந்த இடைத்தேர்தலில் தான் முதன் முதலாக வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஓர் சில இடங்களில் தேர்தல் சலசலப்புகள் நிலவினாலும் அவைகள் உடனடியாக களையப்பட்டு விறுவிறுப்பாக அனைத்து இடங்களிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்