#By-Election Result: இடைத்தேர்தல் அனைத்திலும் பாஜகவுக்கு பின்னடைவு!
5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு.
குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, குஜராத்தில் பாஜக 152 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. முன்னிலை விவரங்களை பார்த்தால் கிட்டத்தட்ட குஜராத்தை தனது கோட்டையாகவே பாஜக மாற்றியுள்ளது.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. அங்கு காங்கிரஸ் 38 இடங்களிலும், பாஜக 27 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இடைத்தேர்தல் அனைத்திலும் பாஜகவுக்கு பின்னடைவை சந்தித்து வருகிறது. 5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக பின்னடைவில் உள்ளது.
உ.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் பிகார் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதி மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில், உத்தர பிரதேசத்தில் கதாலி தொகுதியில் ராஷ்ட்டிரிய லோக் தளமும், ராம்பூரில் சமாஜ்வாதி கட்சியும் முன்னிலையில் உள்ளன.
மேலும், மெயின்புரி நாடாளுமன்ற தொகுதி (உ.பி) – சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் முன்னிலை, பதம்பூர் (ஒடிசா) – பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பர்ஷா சிங் பரிஹா முன்னிலை, சர்தார் சாஹர் (ராஜஸ்தான்) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த – அணில்குமார் முன்னிலை, குர்ஹானி (பிகார்) ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் மனோஜ் சிங் முன்னிலை மற்றும் பனுபிரதப்பூர் (சத்தீஸ்கர்) காங்கிரஸ்ஸின் சாவித்ரி மாண்டவி பெடாகியோர் முன்னிலை பெற்று வருகின்றனர். இரு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆதிக்கம் செலுத்தினாலும், 5 மாநில இடைத்தேர்தலில் பாஜவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.