ரூ. 2 கோடி காப்பீடு பணத்திற்காக நாடகம் ஆடிய தொழிலதிபர் கைது..!
ஹரியானாவில், உயிருடன் எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தொழிலதிபரை சத்தீஸ்கரில் போலீசார் உயிருடன் பிடித்தனர்.
ஹரியானாவில் அக்டோபர் 7 ம் தேதி, ஹான்சி நகரமான ஹிசாரில் ஒரு தொழிலதிபர் காரில் சென்று கொண்டு இருந்தபோது, சில மர்ம நபர்கள் அவரின் காரை துரத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பயத்தில் தனது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் சிலர் தன்னைப் பின்தொடர்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
பின்னர், குடும்பத்தினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் காருடன் அந்த தொழிலதிபரையும் தீ வைத்து எரித்தாக கூறப்படுகிறது. இதனால், காரும், அந்த தொழிலதிபரும் முற்றிலும் எரிந்தனர்.
உயிரிழந்த தொழிலதிபருக்கு பார்வாலாவில் ஒரு கண்ணாடி தொழிற்சாலை உள்ளது. இவர் செவ்வாய்க்கிழமை இரவு 11 லட்சம் பணத்துடன் சென்றதாக கூறப்படுகிறது. அந்த மர்ம நபர்கள் தொழிலதிபரிடமிருந்து ரூ .11 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு காருடன் தொழிலதிபரையும் எரித்து இருக்கலாம் என கூறப்பட்டது.
பின்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹிசார் போலீசார் இந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையின் போது, சத்தீஸ்கரில் அந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், நடத்திய விசாரணையில், இந்த நபர் பெயரில் ரூ .2 கோடி காப்பீடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த காப்பீடு பணத்தை பெறவே தான் கொலை செய்யப்பட்டது போல நாடகம் ஆடினார் என்பதும், அவரின் தொழில் சரியாக நடைபெறவில்லை என்பதாலும், அவருக்கு கொஞ்சம் கடன் இருப்பதாலும் இந்த நாடகத்தை அந்த தொழிலதிபர் நடத்தி உள்ளார் என்பது தெரியவந்தது.
ஆனால், காரில் எரிக்கப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். சத்தீஸ்கரில் இருந்து அந்த தொழிலதிபரை ஹரியானாவுக்கு கொண்டு வருகிறார்கள்.