நேபாளத்தில் நிலச்சரிவு: ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பேருந்துகள்! 63 பயணிகளின் நிலை?
நிலச்சரிவு : நேபாளத்தில் பெய்த கனமழைக்கு மத்தியில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இந்த நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேருந்துகள் சிக்கி திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மதான் – அஷ்ரித் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி இரு பேருந்துகள் ஆற்றில் கவிழ்ந்தன, இரண்டு பேருந்துகளிலும் 63 பேர் பயணித்த நிலையில், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, இமயமலை நாடு முழுவதும் பல சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. தொடர் மழை காரணமாகவும், திரிசூலி ஆற்றின் வலுவான நீரோட்டம் காரணமாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும், பயணிகளை தேடி மீட்குமாறு அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, மறு உத்தரவு வரும் வரை காத்மாண்டுவிலிருந்து பாரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட பேரழிவுகளின் குறித்து சோகமான செய்திகள் வெளியாகி வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மழை தொடர்பான விபத்துகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடினமாகி வருகிறது. பீகாரில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் மற்றும் மின்னல் காரணமாக உயிரிழப்புகள் தொடர்கின்றன.