இன்று முதல் பஸ், ஆட்டோக்கள் இயங்கலாம்.! ஆனா எங்க தெரியுமா?
கர்நாடகாவில் பஸ், ஆட்டோக்கள் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் இயங்கலாம் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அனுமதி அளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்து உள்ள நாடு முழுவதும் 4-ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த 4வது கட்ட ஊரடங்கிற்கான விரிவான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும், சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்கள் எவை என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மாநிலங்களுக்குள் பேருந்துகளை இயக்குவதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து அறிவிக்கலாம் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் பஸ், ஆட்டோக்கள் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் இயங்கலாம் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். சிவப்பு மண்டலம் மற்றும் கண்டைன்மெண்ட் பகுதிகளில் மட்டும் இந்த உத்தரவு அமலாகாது என்று கூறியுள்ளார். மாநிலங்களுக்குள் ரயில் சேவை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சலூன் கடை உள்ளிட்ட அனைத்து கடைகளையும் இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது என்பது கட்டாயம் தொடரும். அதேநேரம் கர்நாடகாவில் இருந்து எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் செல்லலாம், அதற்கு எந்த தடையும் கிடையாது என கூறப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகாவில் கொரோனாவால் 1147 பேர் பாதிக்கப்பட்டு, 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.