#BUDGET2022: குடியரசு தலைவர் உரையில் திருக்குறள்! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!
2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் தொடங்கியது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றி வருகிறார். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவது இது 5வது முறையாகும். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையில், 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தோருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய குடியரசு தலைவர், வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் மற்றும் நேதாஜி 125வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை நினைவுகூர்ந்தார். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டன. இந்தியா கொரோனாவால் கடுமையான சவால்களை சந்தித்தது; இருப்பினும், ஒரே ஆண்டில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு எனது வாழ்த்துகள்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்கிறது. கடுமையான சவாலான காலத்திலிருந்து இந்தியா ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளது. கொரோனா 3வது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. இந்திய தயாரிப்பு தடுப்பூசி உலகம் முழுவதும் 180 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மூத்த குடிமக்கள் 90% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களை விட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை மக்கள் சுகாதார திட்டங்களை பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசு திட்டம். சமுதாயத்தில் சம நிலை இருக்க வேண்டும் என்பது அம்பேத்கரின் எண்ணம்; அதனை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
பொருளாதாரத்தில் கடும் பாதிப்படைந்த ஏழைகளுக்கு நேரடியாக பணம் கிடைப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது.டிஜிட்டல் பண பரிவர்த்தனை கொரோனா பொதுமுடக்க காலத்தில் அனைவருக்கும் பேருதவியாக இருந்தது. கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தி பொருட்கள் 33 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 6 கோடி ஏழைகளுக்கு பைப் மூலம் குடிநீர் வசதி எனத் தெரிவித்தார். நாடு முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
குடியரசு தலைவர் உரையின்போது கல்வி தொடர்பான பேசியபோது திருக்குறளை மேற்கோள்காட்டினார். அதாவது, நாடாளுமன்ற கூட்டு கூட்டத் தொடரில் பேசி வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திருவள்ளுவர் பெயரை குறிப்பிட்டு அவர் எழுதிய ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறளை குறிப்பிட்டார். நாட்டின் கல்வித் திட்டங்கள் குறித்து பேசும் பொழுது திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
இதையடுத்து பேசிய அவர், ‘ஸ்டார்ட் அப்’ திட்டங்கள் மூலம் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கான நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவின் மொத்த வேளாண் உற்பத்திப் பொருட்களின் சதவிகித 33% அதிகரித்துள்ளது. சிறு விவசாயிகள் அவர்களது அருகில் உள்ள பகுதிகளிலேயே தங்களது விளை பொருட்களை விற்பனை செய்யும் வகையிலான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. இயற்கை உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த வியாபாரிகளின் விற்பனை பொருட்களை ஆன்லைன் நிறுவனங்களுடன் அரசு இப்போது இணைக்கிறது என நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். இதனிடையே, குடியரசுத் தலைவர் தனது உரையை தொடங்கும் முன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட் மசோதாவை தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமல் தாமதம் செய்வதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றும் போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முழக்கமிட்டனர் திமுக எம்பிக்கள்.