அரசுக்கு வரும் ஒரு ரூபாயில் வரவு மற்றும் செலவை பிரித்து காட்டிய பட்ஜெட்..!
அரசாங்கத்திற்கு வரும் ஒவ்வொரு ரூ.1-க்கும் 58 பைசா வரியிலிருந்து வரும் பட்ஜெட் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின்படி, அரசுக்கு வரும் ஒரு ரூபாயில் வரவு மற்றும் செலவு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு 1 ரூபாயில் 58 பைசா நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் வரும். 35 பைசா கடன் மற்றும் பிற கடன்கள் மூலம் வரும். அதேசமயம், 5 பைசா வரி அல்லாத வருவாயிலிருந்து வரும். முதலீட்டு விலக்கு மற்றும் கடன் அல்லாத மூலதனங்கள் மூலம் 2 பைசா வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், செலவைப் பற்றி பேசினால், ஒரு ரூபாய்க்கு மத்திய அரசின் கடனுக்கான வட்டிக்காக 20 பைசா செலுத்தும். இதற்குப் பிறகு மாநிலங்களின் வரி பங்கீடு 17 பைசா . பாதுகாப்பு துறைக்கு 8 பைசா ஒதுக்கீடு உள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு 15 பைசாவும், மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு 9 பைசாவும் செலவிடப்படும். அதே நேரத்தில், நிதி குழு சார்ந்த பங்கீடு 10 பைசா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மானியமாக 8 பைசாவும், ஓய்வூதியமாக 4 பைசாவும் செலவாகும். மற்ற செலவுகளுக்கு 9 பைசா செலவழிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.