எந்தவிதமான விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது பொது பட்ஜெட்!
எந்தவிதமான விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் இன்று நிறைவேறியது.
நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்து, முடக்கி வரும் நிலையில், கால அவசாகம் கருதி ‘கில்லோடைன்’ முறையின் மூலம் பட்ஜெட் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தனது 5-வது மற்றும் கடைசி பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தது. அதன்பின் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தநிலையில், 2-வது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது.
ஆனால், 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து 8-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடக்கி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அதிமுக, திமுக எம்.பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு நிதிதொகுப்பு கேட்டு தெலுங்கு தேசம் எம்.பி.க்களும், நிரவ்மோடி மோசடி தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்களும் அவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு துறைகளுக்கும் அடுத்த முதல் தேதி முதல் செலவுக்கான பணம் ஒதுக்கீடுசெய்ய வேண்டி இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால், அவையில் பட்ஜெட் குறித்த விவாதம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், காலம் நேரம் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, கில்லட்டைன் முறையை மக்களவையில் கொண்டு வந்து பட்ஜெட்டையும், நிதி ஒதுக்கீடு மசோதாவையும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
இதன்படி, இந்த முறையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 2018-19ம் பட்ஜெட் மற்றும் நிதி ஒதுக்கீடு மசோதா மீது எந்தவிதமான விவாதமும் இன்றி, குரல் வாக்கெடுப்புக்கு அனுமதித்தார். மக்களவையில் பாஜகவுக்கு போதுமான பெரும்பான்மை இருப்பதால், குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இதையடுத்து பட்ஜெட்டும், நிதிஒதுக்கீடு மசோதாவும் நிறைவேறியதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
இந்த இரு மசோதாக்களும் அடுத்து மாநிலங்கள் அவைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், நிதி மசோதாவைப் பொறுத்தவரை மாநிலங்கள் அவைக்கு அனுப்பப்படும். இந்த இரு மசோதாக்களுக்கும் அடுத்த 14 நாட்களுக்குள் விவாதம் நடத்தி திருப்பி அனுப்பாவிட்டால், அது நிறைவேறிவிட்டதாக அறிவிக்கப்படும். மாநிலங்கள் அவையில் எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.