மத்திய பட்ஜெட் 2025 : எப்போது தாக்கல்? எதிர்பார்ப்புகள் என்ன?
வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயரத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை அடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இன்று காலை 11 மணிக்கு ‘மத்திய பட்ஜெட் 2025 -2026’-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 8வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்-ஐ தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் இருக்குமென கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னர் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏழை மக்களை அன்னலட்சுமி ஆசிர்வதிக்கட்டும் என பேசினார். இது பட்ஜெட் குறித்த ஒரு குறிப்பு போல பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார். அதில், கச்சா எண்ணெய் விலை குறையும், இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கும், தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது, வெள்ளி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்தார். மேலும் வேலைவாய்ப்பின்மை கணிசமாக குறைந்து உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு குறித்த முக்கிய அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி விலக்கு உற்சவரம்பு உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. மேலும், பழைய வரி விதிமுறை முற்றிலுமாக நீக்கப்பட்டு புதிய வரி விதிப்பு முறை பின்பற்றப்படும் என்று கூறப்படுகிறது. இதுபோல பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.