BSNL செலவை குறைக்க 20,000 ஒப்பந்த ஊழியர்களை நீக்க அந்நிறுவனம் திட்டம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் 20,000 ஒப்பந்த ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
அரசின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். சமீபத்தில் சம்பள செலவுகளை குறைக்க, மத்திய அரசு ஒய்வு வயது நெருங்கியவர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்க முடிவு செய்ததை அடுத்து 92,000க்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வு பெற்றனர். தற்போது மீண்டும் ஒப்பந்த பணிகளின் செலவை குறைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் 20,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியபோது, விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்திய பின்னரும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
13 ஒப்பந்த ஊழியர்கள் இதுவரை சம்பளம் வழங்காமல் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் முதன்மை பொது மேலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஒப்பந்த பணிகளுக்கான செலவுகளை குறைக்க வேண்டும் என்றும், ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியில் அமர்த்துவதை குறைக்கவும் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே 79,000 பேர் விருப்ப ஓய்வு வழங்கியதை தொடர்ந்து தற்போதைய முடிவால் மேலும், 20,000 ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி விட்டால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமில்லாமல் சேவைகளை வழங்குவதும் கடினமாகி விடும் என்று தொழில் சங்கத்தினர் கூறியுள்ளனர்.