இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் !!தினகரனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை நீட்டித்து உத்தரவு!!
- இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
- டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க மார்ச் 20 வரை தடை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
அதேபோல் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிச்சாமி -ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் அணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதன் பின்னர் தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரில் தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார் தினகரன்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தது. இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க மார்ச் 20 வரை தடை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது .