பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் – மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி!
பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், மக்கள் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இந்தியாவில் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தடுப்பூசி போடுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பு செலுத்துவதற்கு அனுமதி கிடையாது என ஏற்கனவே கூறப்பட்டு வந்தது போல கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவிலும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. இது தொடர்பாக தேசிய நிபுணர் குழு தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி வந்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்பொழுது பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதேசமயம் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக தாய்மார்கள் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை மூலம் தடுப்பூசி பெற்றால் அவர்களை ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.