#BREAKING : பிரதமரை சந்தித்த தமிழக பாஜக எம்.எல்.ஏ-க்கள்…! பேசியது என்ன…?
தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, பாஜகவின் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் சந்தித்து பேசினர்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் உள்ள மகாபலிபுரம்,தஞ்சை போன்ற ஆன்மீக சுற்றுலா தளங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசியலில் தேசத்துக்கு எதிரான செயல்பாடுகள் இருப்பதையும் சொல்லியுள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசியதாக கூறியுள்ளார்.
மேலும், நதிநீர் இணைப்பு பற்றி பிரதமரிடம் பேசினோம். எங்களிடம், தண்ணீரை சேமிப்பதற்கான வழிகளை கடைபிடியுங்கள் என்றும், மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் என்றும் கூறினார் என தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்கள் அவரிடம் நீட் சம்பந்தமான கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை தடை செய்ய முடியாது என தெரிந்தும் திமுக அதை தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்தது. இதற்காக குழு அமைத்தனர். அந்த குழு நீட்டின் சாதகங்களை கேட்காமல், நீட் பாதிப்பை மட்டும் ஆராய குழு அமைத்துள்ளனர். அவரால் முடியாது என தெரிந்து, சாக்குபோக்கு சொல்வதற்காக தான் இந்த குழுவை அமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.