#Breaking : டெல்லியிலுள்ள லஜ்பத் நகர் துணிக்கடையில் திடீர் தீ விபத்து!
- டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- 30 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறையில் கடைகள் அனைத்தும் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவ தொடங்கியதால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்துள்ளது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திறகு 16 வாகனங்களில் தீயணைப்பு துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால் 30 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
துணிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அருகிலிருந்த கடைகளுக்கும் பரவியதால் வெளியில் நடமாட கூடியவர்களுக்கு இந்த தீ விபத்து புகையின் காரணமாக மூச்சு பிரச்சனைகளும் ஏற்பட கூடிய நிலையும் உருவாகி உள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும், கடையிலிருந்த துணிகள் அனைத்தும் தீயில் கருகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.