#Breaking:சேகர் ரெட்டி வழக்கு – உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
கடந்த 2016-ஆம் ஆண்டு நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சூழலில்,தொழிலதிபர் சேகர் ரெட்டி பழைய பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக,வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கியதாக புகார் எழுந்தது.இதையடுத்து, சென்னையில் இருக்கும் சேகர் ரெட்டி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.அப்போது,பெட்டி பெட்டியாக ரூ.34 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளும்,ரூ.147 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 நோட்டுகளும்,178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, சேகர் ரெட்டி மற்றும் பிரேம்குமார், ஸ்ரீனிவாசுலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா ஆகிய 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.ஆனால்,இந்த வழக்கில் சேகர் ரெட்டிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து,சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனால்,அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரி சேகர் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்திருந்தார்.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாராணைக்கு வந்த நிலையில், சேகர் ரெட்டிக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதித்தும்,மேலும்,சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்க துறையின் வழக்கை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனிடையே,பணம் பதுக்கியதற்கான ஆதாரம் உள்ளதாகவும்,சேகர் ரெட்டியிடம் தொடர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி அமலாக்க துறை வாதிட்ட நிலையில்,உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.