#Breaking:தேச துரோக வழக்கு பதியக் கூடாது – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மத்திய அரசு தேச துரோக வழக்கு தொடர்பான சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர போராட்டத்தை அடக்குவதற்காக தேச துரோக வழக்கு சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.இந்த சட்டப்பிரிவு தற்போது வரை அமலில் உள்ள நிலையில்,பழிவாங்கும் நோக்கம்,அரசியல் காரணத்திற்காக அவை பயன்படுத்தப்படுகின்றது எனவும்,அதனை நீக்க கோரியும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் சார்பாக பொதுநல மனு உச்சநீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக,மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் ஆலோசனைக் கேட்ட நிலையில்,தேச துரோக வழக்கு சட்டப்பிரிவை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும்,இல்லை எனில் அதில் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனால், மறுபரிசீலனை பணிகளை 3-4 வாரங்களில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில்,தேச துரோக வழக்கு சட்டப்பிரிவு 124 ஏ-வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தற்காலிகமாக வழக்கு பதியக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.மேலும்,மத்திய,மாநில அரசுகள் தற்போதைக்கு தேச துரோக வழக்குகளை பதியமாட்டார்கள் என நம்புவதாகவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குறிப்பாக,இந்த வழக்கில் ஏற்கனவே சிறையில் உள்ளவர்கள் பிணை கோரலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.