#Breaking: ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதி!
ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதி வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இதனையடுத்து, 4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசி, மாலை 6.30 மணியளவில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த புயலால் 72 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்குவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
இந்நிலையில் ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்பை ஹெலிகாப்டர் மூலம் இன்று பிரதமர் மோடி பார்வையிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதி அளிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.50,000 நிதி வழங்குவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மோடி, ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மத்திய, மாநில அரசு துணைநிற்கும் எனவும் தெரிவித்தார்.