#BREAKING: மத்திய அரசுக்கு ரூ.30,000 கோடி வழங்குகிறது ரிசர்வ் வங்கி!
மத்திய அரசுக்கு ரூ.30,307 கோடி நிதியை ஈவுத்தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில், மும்பையில் ரிசர்வ் வங்கியின் 596 வது மத்திய இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலை, உலகளாவிய உள்நாட்டு சவால்கள் முதல் புவிசார் அரசியல் தாக்கங்களின் தாக்கம் வரை விவாதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டத்தில், ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை, ரிசர்வ் வங்கியின் செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, 2021-22-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக ரூ.30,307 கோடி நிதியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், ரிசர்வ் வங்கி தற்செயல் அபாய இடையகத்தை 5.50%-ஆக பராமரிக்க முடிவு செய்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்கான உபரியாக அதாவது ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வாரியம் வழங்கிய தொகை அரசின் மதிப்பீட்டை விட குறைவாக உள்ளது. ரூ. 73,948 கோடி ஈவுத்தொகை பெற அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. கடந்தமுறை ஜூலை 2020 – மார்ச் 2021 காலத்திற்கான ஈவுத்தொகையாக ரூ.99,122 கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.