#BREAKING: ராஜஸ்தான் சபாநாயகர் கோரிக்கை நிராகரித்த -உச்சநீதிமன்றம்.!
உச்சநீதிமன்றம் ராஜஸ்தான் சபாநாயகர் கோரிக்கை நிராகரித்தது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதையெடுத்து, இரண்டு முறை சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.
இதனால், மாநில சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி கடந்த ஜூலை 14- ம் தேதி தகுதிநீக்க நோட்டீஸை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பினார். பின்னர், சபாநாயகர் நோட்டீஸை ரத்து செய்ய கோரி சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த வழக்கு மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் மீண்டும் வந்தது. அப்போது, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது வருகின்ற ஜூலை 24-ஆம் தேதி வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், சபாநாயகர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரிய சபாநாயகரின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம். மேலும், சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் வரும் 24-ஆம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.