#BREAKING: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக அறிவிப்பு!
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதுவும் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் popularfrontofindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார். நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் மத்திய அரசின் தடையை ஏற்கிறோம் என கூறியுள்ளார்.