#BREAKING: நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவு.!
நாடு முழுவதும் மருத்துவ தேவைக்காக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க ஒப்புதல் அளித்து பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை என்பது நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்து வருகிறார்கள்.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை மத்திய அரசு இறக்குமதி செய்து வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் மருத்துவ தேவைக்காக 551 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே ரூ.201.58 கோடி செலவில் 162 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் வைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.