#BREAKING: 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன..?
டெல்லியில் 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 6-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொலை தொடர்பு சேவையை தொடங்கி வைத்தார். இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தின் திறனைக் காட்ட, நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தலா ஒரு பயன்பாட்டை பிரதமரின் முன் செய்து காட்டினர். முதற்கட்டமாக சென்னை, அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5ஜி சேவைக்கான ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்பின் கடந்த ஜூலை 26-ஆம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் – ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்குபெற்றன. இதில் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் எடுக்கப்பட்டது. இதையடுத்து, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதாக அறிவித்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.
முதலில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக இணையத்தை ஆதரிக்கும் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை அல்லது 5G சேவையானது, புதிய பொருளாதார வாய்ப்புகளையும் சமூக நலன்களையும் உருவாக்கி, மாற்றும் சக்தியாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ 5G டிசம்பர் 2023க்குள் ஒவ்வொரு தாலுகாவையும், ஒவ்வொரு மாவட்டத்தையும் சென்றடையும் என முகேஷ் அம்பானி கூறியுள்ளனர்.
5ஜி தொழில்நுட்பத்தின் சிறப்பு என்ன?
3ஜி, 4ஜி, கால்வாய் நீர் போன்றது என்றால், 5ஜி அதிகமாக வெள்ளம் ஓடும் ஆறுபோல இருக்கும். உலகிலேயே சிங்கப்பூரில் 4ஜி எல்டிஇ பயன்பாட்டாளர்களுக்கு 47.5 Mbps வேகம் கிடைக்கிறது. இந்தியாவில் 4ஜி எல்டிஇ பயன்பாட்டாளர்களுக்கு 11.5 Mbps வேகம் கிடைக்கிறது. எனவே, 5ஜி சேவையில் ஒரு நொடிக்கு 7 Gbps பதிவிறக்க வேகமும், 3 Gbps பதிவேற்ற வேகமும் இருக்கும். எந்தவொரு திரைப்படத்தையும் ஒரு சில நொடிகளில் அதிவேகத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
மேலும், போக்குவரத்து, விவசாயம், சுகாதாரம், கல்வி உட்கட்டமைப்பு, தளவாடம் ஆகியவற்றில் வளர்ச்சியை அதிகரிக்கும். விளையாட்டு, பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகள் பயன்பாட்டை அதிகரிக்கும். 5ஜி, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் 1.5 லட்சத்துக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவாகும். தடையற்ற சேவை, விரைவான செயல்பாடு, அதிகரிக்கப்பட அலைக்கற்றை செயல்திறனை 5ஜி தொலை தொடர்பு தொழில்நுட்பம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.