#BREAKING: பேரறிவாளன் வழக்கு – அதிகாரம் யாருக்கு? மத்திய அரசுக்கு அடுக்கடுக்காக கேள்வி!
தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 2- 3 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பேரறிவாளன் விடுவிக்கக்கோரிய வழக்கு தொடர்பான விசாரணையின்போது, மத்திய அரசின் கூற்றுபடி கிரிமினல் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என கூறுகிறீர்களா? என்றும் ஆளுநர் 2- 3 ஆண்டுகளாக முடிவும் எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆளுநர் முடிவு தொடர்பான ஆவணத்தின் நகலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது.இதன்பின் மத்திய அரசு கூறுகையில், மாநில அரசின் முடிவு அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கும் போது ஆளுநர் குடியரசுத்தலைவரிடம் முறையிடலாம். இந்த விவகாரத்தில் விடுதலை தொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளது. இதற்கு நீதிபதிகள் கூறுகையில், இவ்வழக்கில் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்?, எந்த விதியின் கீழ் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார்.
எந்த விதியின் கீழ் மாநில அரசுக்காக, மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகிறீர்கள்?, ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிட வேண்டும், மத்திய அரசு இல்லை. ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும் 3 ஆண்டுகள் முடிவெடுக்காமல் இருந்தது ஏன்? என்றும் பேரறிவாளன் விடுதலை வழக்கில் நேரத்தை மத்திய அரசு வீணடிப்பதாக தெரிகிறது எனவும் பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக முன்வைத்ததனர். கடந்த முறை வழங்கப்பட்ட இரண்டு வாய்ப்புகள் தொடர்பாக மத்திய அரசின் முடிவு என்ன? கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மத்திய அரசு கூறுவது போல் இருக்கிறது.
ஆளுநர் முடிவு மாநில அரசின் முடிவுக்குள் வருகிறது. அமைச்சரவை முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்பதை தெளிவுபடுத்துங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மேலும் சில வாதங்களை முன்வைக்க விரும்புவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி, மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும் வழக்குகளில் விடுதலை செய்வது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கான கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு கூறுகையில், அப்படியானால், 70 ஆண்டுகளாக ஆளுநர்கள் அளித்த தண்டனை குறைப்பு உள்ளிட்டவை அரசியலமைப்புக்கு எதிரானதா? என கேள்வி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆளுநர் முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்?. நாங்கள் முடிவெடுக்க முடிவு செய்த போது குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளீர்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளும், மத்திய அரசின் வாதமும் வேறு வேறாக உள்ளது. நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு தெளிவாக பதிலளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டனர். மேலும், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் பரிசீலனை மட்டுமே தேவை, ஒப்புதல் அல்ல. விடுதலையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கால அவகாசம் வழங்கியது. ஆனால், யாருக்கு அதிகாரம் உள்ளது? என மத்திய அரசுதான் உச்ச நீதிமன்றத்தை நாடியது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.