#BREAKING: பெகாசஸ் விவகாரம் – விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Default Image

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட புகாரில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தொழிநுட்ப வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைப்பது தொடர்பாகத் தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக கூறப்பட்டது.

அதன்படி, பெகாசஸ் தொடர்பாகத் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நிபுணர் குழு விசாரணை நடத்தும் என்று தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒய்வு பெற்ற நீதிபதி ஆர்.வீ.ரவீந்திரன் தலைமையில் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் அடங்கிய 3 பேர் கொண்ட குழு உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணை நடத்தும் என கூறியுள்ளது.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கூறுகையில், பெகாசஸ் விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை. தொழில்நுட்பங்கள் தேவைதான், ஆனால் குடிமக்களின் தனி மனித பிரைவசி காக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

தற்போதைய காலகட்டத்தில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த, பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கைகள் தேவை. உளவு பார்ப்பது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் என்பதில் மாற்றமில்லை, வளர்ச்சி அளவிற்கு தனிமனித உரிமைகளும் முக்கியம், தனிநபர் ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்.

பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டு எதையும் மறுதலிக்கவில்லை, ஆகவே, மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க வேண்டியுள்ளது என்பதில் மறுப்பு இல்லை. எனவே நிபுணர் குழு நியமித்து உத்தரவிடுகிறோம் என்றும் இதனை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும், பெகாசஸ் உளவு வழக்கில் அவகாசம் அளித்தும் ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கம் தப்பிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரது செல்போன் உரையாடல்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுகேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை அடுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்