#Breaking:புதுச்சேரி துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் மனு!
புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.முதல்வராக கடந்த மே மாதம் 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார்.ஆனால்,அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.இதற்கிடையில்,துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சகர்கள், சபாநாயகர் பதவிகளை பாஜக கேட்டு வந்தது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்தது.
இதனையடுத்து,பாஜக மேலிட தலைவர்களோடு முதல்வர் ரங்கசாமி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, 2 அமைச்சர்களை ஒதுக்கீடு செய்து தர ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார். இதனால், என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையில் சமரச தீர்வு ஏற்பட்டது.
மேலும்,புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி கூடுகிறது.அப்போது கவர்னர் உரை இடம்பெறும். தொடர்ந்து பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று சபாநாயகர் செல்வம் முன்னதாக அறிவித்தார்.
இந்நிலையில்,புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ ராஜவேலு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.துணை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் முடிவடையும் நிலையில்,எம்எல்ஏ ராஜவேலு மனுதாக்கல் செய்துள்ளார்.சபாநாயகர் பதவி பாஜகவுக்கு தரப்பட்டுள்ளதால்,துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது.