#Breaking:ஜிப்மரில் இந்தி திணிப்பா?- துணை ஆளுநர் தமிழிசை சொன்ன முக்கிய தகவல்!
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவித்ததுக்கு,அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் இன்று மருத்துவமனை முன்பு 500க்கும் மேற்பட்ட திமுகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.இந்தியை கட்டாயமாக்கும் அறிவிப்பை திரும்ப பெற கோரி சிவா தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு இல்லை என்று புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில அவர் கூறியதாவது:
“தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில்,தமிழ் எந்தவிதத்திலும் வேறுபடாமல்,தடைபடாமல் இருப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும்,இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மருத்துவமனையில் இருப்பதால்,உள்நிர்வாக ரீதியான பணிக்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் இந்தி இடம் பெற்றுள்ளது.இது இந்தி திணிப்பு என்று தவறாக வெளியில் பரவியுள்ளது.
மேலும்,ஜிப்மரில் தமிழ் பயன்படுத்தப்படவேண்டும்,எல்லா பெயர் பலகைகளிலும் முதல் பகுதியாக தமிழ் இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு கொடுக்கப்படவேண்டிய அத்தனை அறிக்கைகளிலும் தமிழ் இருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை தான் நான் பிரதானமாக எடுத்துக் கொள்கிறேன்.
ஆகவே,ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை.தமிழ் பிரதானப்படுத்தப்படுகிறது.இங்கு இந்தி வெறி இல்லை,திணிப்பு இல்லை. இதனை அரசியல் ஆக்க வேண்டாம்”,என்று தெரிவித்துள்ளார்.