#BREAKING: சீனா விவகாரத்தில் தவறான தகவல் தருவது ராஜதந்திரம் இல்லை – மன்மோகன் சிங்.!
லடாக் எல்லையில் கடந்த வாரம் திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடைபெற்ற மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீன தரப்பில் 35 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை சீனா தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
சமீபத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியப் பகுதிக்குள் யாரும் நுழையவில்லை என கூறியதை தொடர்ந்து, ப.சிதம்பரம், ராகுல் காந்தி, சோனியா காந்தி, உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். சீனா ஊடுருவவில்லை என்றால் எங்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்..? ஏன் கொல்லப்பட்டனர்..? என கேள்விகளை முன்வைத்தனர்.
பின்னர், சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீனா ஊடுருவவில்லை இல்லை என்று தான் நரேந்திர மோடி பேசினார் என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் கொடுத்தது. இதையெடுத்து, லடாக் எல்லையில் நடைபெற்ற மோதல் குறித்து மத்திய அரசு சரியான விளக்கம் கொடுக்கவில்லை என எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், எல்லை மோதல் விவகாரத்தில் இந்தியா பதிலடி குறைவாக இருந்தால் அது மக்களுக்கு செய்யும் துரோகம். பிரதமர் மோடி தனது வார்த்தைகளால் ஏற்படும் விளைவுகளை அறிந்து பேசவேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனா விவகாரத்தில் தவறான தகவல் தருவது ராஜதந்திரம் இல்லை, உறுதியான தலைமைக்கு அழகல்ல. ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் வரலாற்று துரோகம், சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.