Breaking News: உத்தரபிரதேசத்தில் புழுதிப்புயல்,கனமழை ! 26 பேர் உயிரிழப்பு..!
உத்தரபிரதேசம் மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு புழுதிப் புயல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால், சில மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. மழை, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்குதல் சார்ந்த விபத்துகளில் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஜாவ்ன்பூர் மற்றும் சுல்தான்பூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், உன்னாவ் மாவட்டத்தில் 4 பேரும், சன்டவுலி மற்றும் பஹ்ராய்ச் மாவட்டங்களில் தலா 3 பேரும், ரேபரேலி மாவட்டத்தில் இருவரும், மிர்சாபூர், சிதாபூர், அமேதி மற்றும் பிரதாப்கர் மாவட்டங்களில் தலா ஒருவரும் மழைசார்ந்த விபத்துகளுக்கு பலியானதாக தெரியவந்துள்ளது.
இந்த மரணங்கள் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படும் அரசு நிவாரண நிதி உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேருவதை மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் உறுதிப்படுத்த வேண்டும். இதில் எவ்வித கால தாமதத்தையும் சகித்துக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.