BREAKING NEWS:கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் உயிரிழப்பு 11 ஆக உயர்வு!நோயாளிகளை பராமரித்த நர்ஸ் உயிரிழப்பு! பீதியில் மக்கள்

Default Image

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளார். நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பராமரித்த நர்ஸ் லினியும் (31) இறந்தார்.

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிஃபா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கி,11 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மத்திய சுகாதாரத்துறை குழு விரைந்துள்ளது.

நிஃபா வைரஸ் தாக்குதல் என்பது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்த்தொற்று வகையை சேர்ந்ததாகும். பழந்தின்னி வவ்வால்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. முதன் முதலில் 1998ஆம் ஆண்டில் மலேசியாவில் காம்புங் சுங்காய் நிஃபா என்ற ஊரில்தான் இந்த வைரஸ் தாக்குதல் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் நிஃபா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டில், வங்கதேசத்தில் பழந்தின்ன வவ்வால்கள் மூலம், மரத்தில் கட்டப்படும் கள் பானைகளில் இந்த வைரஸ் பரவி அதன் மூலம் மனிதர்களை தாக்கியுள்ளது. பன்றிகள் உள்ளிட்ட பிற விலங்குகள் மூலமும் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவும் அபாயமும் உள்ளது. வைரஸ் தாக்கினால் சுவாசக் கோளாறுகள் முதல் மூளைக்காய்ச்சல் வரை ஏற்படும். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து உன்னிப்பாகக் கண்காணித்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

இத்தகைய உயிர்கொல்லியான நிஃபா வைரஸ் தாக்கி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதால், அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. புனே ஆய்வகத்தில் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து, நிஃபா வைரஸ் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் இந்த வைரஸ் தாக்குவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து, மாநில அரசுக்கு உதவுவதற்காக மத்திய சுகாதாரக் குழு கேரள மாநிலம் விரைந்துள்ளது.

வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் நோய் தாக்கிய பன்றிகள், வவ்வால்களை நெருங்காமல் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இதேபோல், மரங்களில் இருந்து விழுந்த பழங்களை உண்ணுவதையும், பதப்படுத்தப்படாத கள்ளை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்